முருகனுக்கு மாலை அணிய போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!
முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் சரியான முறையை இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்.
முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் சரியான முறையை இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை ;முருகப்பெருமானின் அருளை பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளது .சுவாமி ஐயப்பனை போல் முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ,மகாகந்த சஷ்டி என பல தினங்களிலும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர் . அதிலும் குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 11, 2025 அன்று தைப்பூசதத்தையொட்டி முருக பக்தர்கள் பலரும் மாலை அணிந்து வழிபடுவது வழக்கம் .
மாலை அணியும் போது கடைபிடிக்க வேண்டியவை ;
முருகப்பெருமானுக்கு பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றது, சிலருக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதில் பல சந்தேகங்களும் ஏற்படும் அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.
மாலை அணியும்போது 108 மணி கொண்ட ருத்ராட்ச மாலையை அணிய வேண்டும். மொத்தம் இரண்டு மாலைகள் அணிய வேண்டும் .ஒன்று முருகப்பெருமானின் டாலர் கொண்டதும் ,மற்றொன்று துணை மாலையும் ஆகும்.
சஷ்டி திதி ,கார்த்திகை, விசாகம், செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களிலும் , உங்களது பிறந்த நட்சத்திர நாட்களிலும் மாலை அணிந்து கொள்ளலாம். மாலை அணிபவர்கள் தாய், தந்தை, குரு அல்லது கோவில் அர்ச்சகர்கள் மூலம் அணிந்து கொள்ள வேண்டும். தானாக அணிய கூடாது.
மாலை அணிவதற்கு முந்தைய நாளிலிருந்து விரதத்தை துவங்க வேண்டும். பாய் , தலையணை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. செருப்பு அணியக்கூடாது. முடி திருத்தம் செய்யக்கூடாது. மது, புகை மற்றும் தாம்பத்திய சிந்தனை அறவே கூடாது. அவரவர் உடைகளை தானே துவைத்து கொள்ள வேண்டும். மாலை அணிந்தவர்கள் பச்சை நிற உடை மற்றும் நீல நிற உடைகளை அணிந்து கொள்ளலாம் .கட்டாயம் கழுத்தில் பச்சை நிற துண்டு அணிந்து கொள்ள வேண்டும்.
மாலை அணிந்தவர்களின் உணவு முறை;
விரத நாட்களில் ஒருவேளை உணவு எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். முடியாதவர்கள் மூன்று வேளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அரை வயிறாக தான் சாப்பிட வேண்டும் .சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். தனக்கென தனியாக தட்டு ,டம்ளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து தலைக்கு குளித்து முருகப்பெருமானை உள்ளம் உருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்து பிறகு தான் உணவு உட்கொள்ள வேண்டும்.
விரத நாட்களின் எண்ணிக்கையானது 6, 12 ,15 ,18 ,21, 27, 36 ,42 ,45 ,48 ஆக இருப்பது சிறந்ததாக சொல்லப்படுகிறது. இதில் உங்களுக்கு ஏற்ப எண்ணிக்கைகளில் விரதம் இருந்து கொள்ளலாம் .ஏதேனும் ஒரு கோரிக்கையை முருகப்பெருமானிடம் முன் வைத்து 48 நாட்கள் விரதம் இருப்பது சிறந்ததாக சொல்லப்படுகிறது.