கோலம் போடுவதால் இத்தனை பலன்களா ?
கோலம் போடுவதால் எதிர்மறையான எண்ணங்களுடன் நம் வீட்டிற்குள் நுழைப்பவர்களின் எண்ணங்களை கூட மாற்றி அமைக்கும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது .
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு வாழ்க்கை முறை தத்துவத்தை ஒளித்து வைத்துள்ளது என்றே கூறலாம். கோலம் போடுவதில் பல நன்மைகளும் ஆச்சரியங்களும் அடங்கியுள்ளது.
கோலம் போடும் முறை மற்றும் பயன்கள் :
அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பே சாணம் அல்லது தண்ணீரில் மஞ்சள் கலந்து தெளித்து பிறகு பச்சரிசி மாவால் கோலம் போடுவது தான் சால சிறந்தது. கோலம் போடுவதற்கு முக்கிய காரணமே தர்மம் செய்வதாகும் .நம் அன்றாடம் சாப்பிடுவதற்கு முன் யாரேனும் ஒரு உயிர்களுக்கு உணவு வழங்கி பிறகு சாப்பிட வேண்டும். நடைமுறை வாழ்வியலுக்கு சரியாகாது என்பதால் தான் நம் முன்னோர்கள் காலையில் பச்சரிசி மாவால் கோலமிட்டால் அது எறும்பு மற்றும் குருவி போன்ற உயிரினங்களுக்கு உணவாக இருக்கும் என்று கடைபிடித்தனர் இது புண்ணியத்தை சேர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு உயிரினங்களுக்கு உணவளிப்பதால் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் .அதனால் தான் கோலம் மகாலட்சுமி கடாட்சம் தரக்கூடியது என சொல்லப்படுகிறது. மேலும் இது காலையில் ஒரு சிறந்த உடற்பயிற்சியும் கூட .மன ஆரோக்கியத்தை சீராக்குவதுடன் தர்மத்தை செய்வதாகவும் உள்ளது.கோலம் போடுவதால் எதிர்மறையான எண்ணங்களுடன் நம் வீட்டிற்குள் நுழைப்பவர்களின் எண்ணங்களை கூட மாற்றி அமைக்கும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது .
பசும் சாணம் இட்டு மாக்கோலம் போட்டு அதன் மீது காவி அடிப்பதால் மும்மூர்த்திகளும் அந்த கோலத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம். ஏனென்றால் பசு சாணத்தில் விஷ்ணு பகவான் வாசம் செய்வதாகவும் ,மாக்கோலத்தில் பிரம்மாவும், சிவபெருமானும் இருப்பதாக நம்ப படுகிறது. மேலும் கோலமிட்டு அதன் எட்டுத்திக்கும் எட்டு பூக்களை வைப்பதன் மூலம் அஷ்டதிக் பாலகர்களை குறித்தும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது .
கோலம் போடம் போது கடை பிடிக்கவேண்டியவை :
கோலம் போடும்போது அமர்ந்து போடக்கூடாது .குனிந்தபடி போட வேண்டும். மேலும் தெற்கு திசை துவங்கியோ அல்லது தெற்கு திசையில் முடிக்குமாறு கோலம் போடக்கூடாது. சுப தினங்களில் இரட்டை கோடுகளால் கோலம் போட வேண்டும். தெய்வ உருவங்கள், எந்திர கோலம்,ஐஸ்வர்யா கோலம், சக்கரக்கோலம் ,நவகிரக கோலம் போன்ற கோலங்களை வாசலில் போடக்கூடாது. பூஜை அறையில் மட்டுமே பச்சரிசி மாவால் போட வேண்டும் .அது மட்டுமல்லாமல் முன்னோர்களை வழிபடும் நாள் மற்றும் அமாவாசை தினங்களில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.
எந்த கிழமையில் என்ன கோலம் போடலாம்?
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரிய சூரிய கோலம், செந்தாமரை கோலம் போடுவது சிறந்தது. அதேபோல் திங்கள் கிழமை அல்லி மலர் கோலமும், செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன்கிழமை மாவிலை கோலம், வியாழக்கிழமை துளசி மாடம் கோலம் ,வெள்ளிக்கிழமை தாமரை இலை கோலம் மற்றும் சனிக்கிழமை பவளமல்லி கோலம் போன்றவற்றை போடுவது தெய்வீக கடாட்சத்தை வீட்டிற்கு பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.