வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல்பத்து உற்சவம் கோலாகலம்
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள், முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து திருமொழித் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
பகல்பத்து விழாவின் 9-ம் நாளில், ஸ்ரீ நம்பெருமாள், முழுவதும் முத்தால் ஆன முத்தங்கி அலங்காரத்தில், மார்பில் மஹாலெக்ஷ்மி பதக்கம் முத்து அபயஹஸ்தம், முத்துமாலை, முத்து குல்லாய், வைரத்தால் ஆன அர்த்தசந்திர ஹாரம், நெத்திச்சுட்டி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.