ரிஷப ராசி நேயர்களே !2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….
ரிஷப ராசி நேயர்களே !
எறும்புபோல் அயராது உழைத்து, தேனீபோல் சேமிக்கும் இயல்பு உடையவர்களே! புதன் உங்களுடைய ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் உங்களுடைய பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தைரியம் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். வழக்கு சாதகமாகும்.
தெலுங்கு, இந்தி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு அயல்நாட்டு நிறுவனத்திலோ அண்டை மாநிலத்திலோ வேலை கிடைக்கும். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால், கேது 9-ல் நிற்பதால் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். தந்தையாருக்கு ஆரோக்கியம் பாதிக்கும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்களுடைய ராசியிலேயே பிறப்பதால் வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும்; பயந்துவிடாதீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை அதிகமாகும்.
ஆனால், செவ்வாய் பகவான் 6-ம் வீட்டில் வலுவாக நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாப் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே சனி 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பெரிய முடிவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.
உங்கள் பலவீனத்தைப் பயன்படுத்தி குறுக்குவழியில் சம்பாதிக்கத் சிலர் தூண்டுவார்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு 6-ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பழைய பிரச்சினைகள் போல வேறு ஏதேனும் இப்போது வந்துவிடுமோ என்று அஞ்சுவீர்கள். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 7-ம் வீட்டிலும் அமர்ந்து ராசியைப் பார்க்கயிருப்பதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள்.
கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்க வழி பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன் சனி சேர்வதால் இக்கால கட்டத்தில் வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் காசோலை தாருங்கள். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். 10.3.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும்.
30.8.2018 முதல் 28.12.2018 வரைக்கும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ம் வீட்டில் சென்று மறைவதால் சிறு சிறு விபத்துகள், வாகனப்பழுது, வீடு பராமரிப்புச் செலவுகள் வந்து நீங்கும்.
வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். பணியாளர்களால் அலைச்சல் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாகச் செயல்படுங்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் பணத்தைக் கொட்டி நஷ்டப்படாதீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்களைப் பற்றிய குறைபாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம்.
இந்தப் புத்தாண்டு திடீர் யோகத்தையும் பணவரவையும் தந்தாலும் வீண் அலைச்சலையும் செலவுகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் திருவதிகை எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஹேமாம்புஜவல்லிதாயார், ஸ்ரீசெங்கமலத்தாயார் சமேத ஸ்ரீசரநாராயணப் பெருமாளை சென்று வணங்குங்கள். புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சி தங்கும்…
source: dinasuvadu.com