மீன ராசி நேயர்களே!
விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! முயற்சி ஸ்தானமான 3-வது ராசியில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 8-ம் வீட்டில் நிற்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு 9-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும்.
திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். ஏளனமாகவும் இழிவாகவும் திட்டியவர்களெல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். பூர்விகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். இந்தாண்டு முழுக்க உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். பொது விழாக்களைத் தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.