தனுசு ராசி நேயர்களே !
சதாசர்வ காலமும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக்கூடிய மனசுடையவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக தொடர்வதால் வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக்கொண்டிருக்காதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் முடியாத செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையால் தடைபட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. மழலை பாக்கியம் கிடைக்கும். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.