‘சமயபுரம் ‘ஸ்ரீமாரியம்மனுக்கு…! சித்திரை திருத்தேர் விழா …!

Default Image

சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேர்த் திருவிழா – சித்திரை 4, (17/04/2018) செவ்வாய்கிழமை காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல். அன்று இரவு 9.00 மணிக்கு திருத்தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி. ( அழைப்பிதழ் இனைத்துள்ளேன்)

கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு 17/04/2018. சித்திரை திருத்தேர் விழா. அம்மனுக்கு மிகமிக விசேஷமானது.

சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே ‘சாய்ஞ்சா கண்ணபுரம், சாதிச்சா சமயபுரம்’ எனும் வாக்கிற்கிணங்க பிரத்யட்ச தெய்வமாக தன் கண்ணசைவினாலேயே லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தவண்ணம் காவிரி நதி பாயும் சோழ நாட்டிலே திருச்சியிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணபுரம் எனப்படும் சமயபுரத்திலே அமர்ந்த நிலையிலுள்ள எழிற்கோலத்திலே அழகுறக் காட்சி தருகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மனின் மகிமை…!

‘சாதிச்சா சமயபுரம்’ எனும் பெருவாக்கிற்கிணங்க, சமயபுரத்திலே தனக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்ரீமாரியம்மனின் லீலா வினோதத்தைச் சற்றே காண்போமா!

விஜயநகர அரசுக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்றுவந்த ஸ்ரீமாரியம்மன் உற்சவர் சிலையைத் தங்கப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்தனராம். அவ்விதம் ஊர்வலமாக வந்தவர்கள் உணவு உட்கொள்ள வேண்டி சமயபுரத்தில் ஸ்ரீமாரியம்மனை இருத்தினர். உணவு உட்கொண்ட பின்னர் மாரியம்மனைத் தூக்க முயன்று முடியாமற்போகவே வருந்தினராம்.

தனக்குரிய இடம் இதுவே என்று அன்னையே சமயபுரத்தில் நிலைத்த பின்னர் விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.1706-1732) அவரது காலத்தில்தான் அன்னைக்குத் தனிக்கோயில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது. இந்த விஜயரெங்க சொக்கநாத நாயக்கரிடம்தான் மௌனகுருவை குருவாகக் கொண்டு வாழ்ந்த தாயுமான சுவாமிகள் கணக்கராக இருந்தார். பின்னர் துறவு பூண்டார்.

விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில்தான் விறலிவிடு தூது, கூளப்ப நாயக்கன் காதலை இயற்றிய சுப்ரதீபக் கவிராயர் வாழ்ந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம்தான் வீரமா முனிவர் தமிழ் பயின்றார்.

தமிழ்ப் புலவர்களை ஆதரிக்காது தெலுங்கு மொழிக்கே ஆதரவு தந்து வந்த நாயக்க மன்னர்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் தமிழ்மொழியை நிலைநாட்ட தாயுமான சுவாமிகள் போன்றோரை தோற்றுவித்தும், சமயத்தை நிலைநாட்ட இதுதான் சமயம் என்று(ம்) சமயபுரத்திலே அமர்ந்திட்ட மாரியம்மனின் லீலா விநோதத்தை என்னவென்று சொல்வது?

சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு நடைபெறும் விழாக்கள்…!

கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ மிகமிக விசேஷமானது. இப்பூச்சொரிதல் விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீமாரியம்மனின் மேல் பூவைச் சொரிந்து அம்மனை வழிபடுவர்.

மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. பூச்சொரிதல் நாள் முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் பூச்சொரிதல் விழா நடைபெறும் பூச்சொரிதல் நாள் முதல் 4 வாரங்களுக்கு ஸ்ரீமாரியம்மனுக்குப் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாம்

பூச்சொரிதல் விழாவின் தாத்பர்யம்: ஊரெங்கும் ‘மாரி’ போடும் சமயங்களிலே உடம்பில் ஏற்படும் முத்துக்களைத் தானே ஏற்று அந்தப் பூ முத்துக்களை பூப்போல ஸ்ரீமாரியம்மன் உதிர்த்து விடுதலால் உள்ளத்தில் எழும் அந்த நன்றியுணர்வை பக்தர்கள் அந்த மாரியம்மனுக்கு வௌதக்காட்டும் செயலின் வௌதப்பாடே பூச்சொரிதல் விழா.

பூச்சொரிதல் விழாவில் முதல் பூ திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதரிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பூக்கள் அம்மனுக்கு பூச்சொரியப்படுகிறது. பூச்சொரிதலுக்கு உதிரிப் பூக்களே பயன்படுத்தப்படுகிறது. சென்னை சிம்சனிலிருந்தும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு லாரியில் பூக்கள் பூச்சொரிதலுக்கு அனுப்பப்படுகிறதாம். பூச்சொரிதல் உற்சவம் காலைமுதல் இரவு வரை நடைபெறுமாம்.

பூச்சொரிதலில் சொரியப்படும் பூவானது ஸ்ரீமாரியம்மனின் சிரசிலிருந்து போடப்படும். இவ்விழாவில் ஸ்ரீமாரியம்மனின் திருமுகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவுக்கு அம்மன் பூக்குவியலில் மூழ்கித் திளைப்பாள்.
பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுடன் உடன்பிறந்த சகோதரிகள் அறுவரில் முதல் பூ சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கே.

ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம்    சமயபுரம் ஸ்ரீமாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்தலால் முதல் மரியாதை இந்த மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்து இரண்டாவது பூ அன்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தாமலை மாரியம்மனுக்கும்
கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது.

இப்பூச்சொரிதல் விழா ஆரம்பமான பின்னர்தான் ஊரெங்கிலுமுள்ள வேம்பு மரங்களிலே வேப்பம்பூவானது அரும்பு கட்ட ஆரம்பிக்குமாம்.
பூச்சொரிதல் விழாவின் முடிவில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரோட்டமும், அதற்கடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. சித்திரை மாதக் கடைசியில் வசந்த விழாவும், வைகாசி மாதம் முதல் தேதியில் பஞ்சபிரகார உற்சவமும் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

India beat Bangladesh
India Women Won
ENGWvsBANW
Australia Womens Won the match
AIRTEL JIO BSNL
Tamilnadu CM MK Stalin talk about Samsung workers protest