கடக ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…
கடக ராசி நேயர்களே!
இடம், பொருள், ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.
தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும். சூரியன் 6-ம் இடத்திலும் புதன் 5-ம் வீட்டிலும் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்துக்கான லைசன்ஸ், இன்சூரன்ஸ், பாஸ்போர்ட்டை உரிய காலகட்டத்துக்குள் புதுப்பியுங்கள்.
ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்குள் நுழைவதால் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இந்த வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் 7-ம் வீட்டிலேயே கேதுவும் இருப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.
கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் வரக்கூடும். மனைவிவழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று செய்வது நல்லது. இந்த 2018-ம் வருடம் முழுக்கவே சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 6-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றிபெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள்.
வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள், பிறமொழிக்காரர்கள் உதவுவார்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். பங்குச்சந்தை மூலமாகப் பணம் வரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வம், செல்வாக்கு கூடும். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும் சனியும் 6-ல் அமர்ந்திருப்பதால் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பணபலம் கூடும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால் சகோதரர் வகையில் நன்மை உண்டாகும்.
03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால் முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சல்கள் வந்து போகும். 01.01.2018 முதல் 13.1.2018 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் வாகன விபத்து ஏற்படக்கூடும்.
வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். கடையை நவீனமயமாக்குவீர்கள். விளம்பர உத்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடுகளுக்குச் செல்ல வேண்டி வரும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.
இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம், பசுமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிபூதி விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
source: dinasuvadu.com