ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் : சபரிமலை ஸ்பெசல்
கார்த்திகை மாதம் பிறந்தவுடன் சுவாமி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் வருகை அதிகமாக தொடங்கிவிட்டது. இந்த வருகை மண்டலபூஜையை தொடர்ந்து இன்னும் அதிகரிக்க கூடும் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகமாக்க பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை வழங்கினார். அந்த தங்க அங்கியானது மண்டல பூஜையின் போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு வருடந்தோறும் பூஜை செய்யப்படும்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் இந்த தங்க அங்கியானது, பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில்தான் வைக்கப்பட்டு இருக்கும். மண்டல பூஜையை நடைபெறுவதை ஒட்டி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து சபரி மலைக்கு நாளை வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கியை வைத்ததும் ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலம் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெறும்.
நாளை இரவு ஓமலூரிலும், 23-ந் தேதி இரவு கோணியிலும், 24-ந் தேதி இரவு பெரிநாட்டிலும் ஊர்வலம் நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும் தங்க அங்கியானது, 25-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலை சென்றடையும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலையில் சுமந்து தங்க அங்கியை சன்னிதானத்திற்குள் எடுத்து செல்கிறார்கள்.
18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. அதனைதொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்று பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
மீண்டும் 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் சுவாமி தரிசனம் நடைபெறும். மேலும், அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின் பகல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும்.
மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மண்டல பூஜையினை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
மகர விளக்கு பூஜையையொட்டி, ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதியன்று நடக்கிறது.