அரியும் சிவனும் சேர்ந்த அவதாரம் ஐயப்பன் : மணிகண்டன் வரலாறு
மகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள். அவள் தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி, தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் துன்புறித்து வந்தாள். மேலும், மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அது, தனக்கு மரணம் நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது கடக்கும்போது தான் தான் அழிக்கப்பட வேண்டும் என வரம் பெற்றாள்.
இரண்டு ஆண்கள் இணைந்து குழந்தை பெறுவது என்பது சாத்தியமில்லை, ஆகையால் தனக்கு அழிவும் இல்லை என்பதாலேயே இந்த வரத்தை மகிஷி கேட்டிருந்தாள். ஆனால் விஷ்ணு மோகினி உருவம் கொண்டபோது, ஐயப்பன் அவதாரமாக தோன்றினார்.
பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டில் வேட்டையாடச் சென்றபோது, பம்பா நதிக்கரையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்தக் குழந்தைதான் ஐயப்பன். குழந்தையில்லாமல் ஏக்கத்தில் இருந்த பந்தளராஜன், அந்தக் குழந்தையை எடுத்து தன் மகனாக வளர்த்தான். ஐயப்பனின் கழுத்தில் மணி ஒன்று கிடந்ததால், ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டான்.
வருடம் செல்கையில், பந்தள ராணி கர்ப்பம் தரித்தாள். அவளுக்கும் ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. இருப்பினும் ஐயப்பனுக்கே இளவரசர் பட்டம் சூட்டப்படும் என்றார் பந்தளராஜன். இதனால் கோபமடைந்த மந்திரியும், ராணியும் சூழ்ச்சி செய்து, ஐயப்பனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி ராணிக்கு மருந்துகளால் குணமாகாத தலைவலி ஏற்பட்டிருப்பதாகவும், காட்டிற்குச் சென்று புலிப்பாலைக் கொண்டுவந்தால் மட்டுமே நோய் குணமாகும் என்றும் கூறினர்.
12 வயது நிரம்பிய ஐயப்பன், புலிப் பாலை கொண்டு வருவதாகக் கூறி காட்டிற்குப் புறப்பட்டார். அங்கு ஐயப்பனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள், பொன்னம்பல மேட்டில் அவரைச் சந்தித்து மகிஷியால் தாங்கள் படும் வேதனைகளைக் கூறினர். இதையடுத்து ஐயப்பன் தேவேலாகம் சென்று, மகிஷியை வென்று பூலோகத்தில் தள்ளினார். மகிஷி வந்து விழுந்த இடமே அழுதா நதிக்கரை என்று தற்போது அழைக்கப்படுகிறது.
மகிஷி வதம் செய்யப்பட்டதும், அவளது அரக்க உருவம் மறைந்து அழகிய பெண்ணாக மாறினாள். பின்னர் ஐயனை அடையும் தன்னுடைய ஆவலை தெரிவித்தாள்.
ஆனால் ஐயப்பன், இந்த அவதாரத்தில் தான் ஏற்றிருக்கும் பிரம்மச்சரிய விரதத்தை எடுத்துரைத்து மறுத்துவிட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தின் இடது பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மனாக வீற்றிருக்கும் வாய்ப்பை அவளுக்கு அளித்தார். பிறகு, தேவர்கள் அனைவரும் புலியாக மாறி, ஐயப்பனுடன் புறப்பட்டனர். புலிக்கூட்டம் ஊருக்குள் வருவதைக் கண்ட அனைவரும் பயந்து நடுங்கினர். ஐயப்பனின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர். ராணியும், மந்திரியும் இறைவனிடம் மன்னிப்பு வேண்டினர்.
எல்லாம் தன் அவதார நோக்கத்திற்காக நடைபெற்றவை என்பதை எடுத்துரைத்த ஐயப்பன், தான் அமைதியாக சூழலில் இருந்து தியானம் செய்ய தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படி கூறினார். அதன்படி ஒரு அம்பை எய்து, அது விழும் இடத்தை தன்னுடைய ஆலயம் அமைக்க தேர்வு செய்தார். அந்த அம்பு விழுந்த இடமே சபரிமலை. அங்கே தனக்கு 18 படிகளுடன் கிழக்கு நோக்கி ஆலயம் அமைக்கும்படியும், அருகிலேயே மாளிகைபுரத்து அம்மனுக்கும் சன்னிதி உருவாக்கும்படியும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.
சபரிமலையில் வாழும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது நியமமாகும். மணிகண்டனை, வஞ்சமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும், 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. இறுதியில் ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் மூலமாகவே 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை வந்தது. தற்போது 41 நாட்கள் விரதம் என்பது ஒரு மண்டலமாக, அதாவது 48 நாட்களாக மாறி இருக்கிறது. ஒருமுகமாக சிந்தை வைத்து நம்பிக்கையுடன் விரதம் இருக்கும் பக்தர்கள், பதினெட்டுப்படி ஐயப்பன் அருளால், வாழ்வில் ஒவ்வொரு படியையும் எளிதாக கடந்து வெற்றியுடன் நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.