புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்! விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்!
மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் யூடியூபர் இர்ஃபான்.
சென்னை : பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது யூடியூபர் சேனல் மூலம் தனக்கென ஒரு ரசிகர்பட்டாளத்தை வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் தனக்கு எந்த குழந்தை பிறக்கும் (Gender Reveal) என்பதை தனது சேனலில் வீடியோ மூலம் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது, மீண்டும் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது என்னவென்றால், சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருந்தது. இதனால், அவரது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டுவதை வீடியோவாக எடுத்து அவரது சேனலில் பதிவிட்டுள்ளார்.
இது தற்போது அடுத்த புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடீயோவை பதிவிட்ட யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை தற்போது இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், மருத்துவர்கள் தவிர மற்றவர்கள் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்பதால் அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவை நீக்கக் கோரி மருத்துவத்துறை அவருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
முன்னதாக, ஊரக நலப்பணி இயக்குநரகத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும், சம்பத்தப்பட்ட மருத்துவர்கள் மீதும் புகாரளிக்கபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.