விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்!
வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10.30 க்கு நீதிமன்றம் கொடுக்கப்போகும் உத்தரவை நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.

சென்னை : விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மார்ச் 27, 2025 அன்று (அதாவது இன்று) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் இப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்கால தடை விதித்துள்ளதால், இன்று காலை 10:30 மணி வரை படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று படம் திட்டமிட்டபடி முழுமையாக வெளியாகுமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையின் முடிவைப் பொறுத்தே படம் ரிலீஸ் ஆகுமா? இல்லையா என்பது தெரியும். படத்தின் வெளியீட்டிற்கு முதலீடு செய்திருந்த மும்பையைச் சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. B4U நிறுவனத்தின் குற்றச்சாட்டு என்னவென்றால், படத்தின் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தப்படி ஓடிடி (OTT) உரிமைகளை விற்கவில்லை என்றும், படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதால் ஓடிடி தளங்களுக்கு விற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களுக்கு நிதி நஷ்டம் ஏற்பட்டதாகவும், உதவி செய்த பணத்தில் 50% நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 27 காலை 10:30 மணி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தடை உத்தரவால் இது பிற்பகல் 12 மணி அல்லது அதற்கு பிறகு தள்ளி வைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி வெளியாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.