தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!
உறியடி விஜய்குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். படத்தில் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் மோனிஷா மோகன் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ‘g squad ‘ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை பற்றிய முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
கதைக்கரு
படத்தின் கதைப்படி, பெஞ்சமின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் (கார்தேகேயன் சந்தானம்) மற்றும் அவரது நண்பர்கள் வடசென்னையின் அடுத்த தலைமுறையினர் விளையாட்டு வீரர்களாக மாற வேண்டும், ரவுடிசம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது என்று விரும்புகிறார்கள். படத்தின் ஹீரோ உறியடி விஜய்குமார் செல்வம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கும் படத்தில் கால்பந்து வீரராக ஆகவேண்டும் என்பது தான் கனவு.
இவர்கள் வாழும் அதே ஏரியாவில் சிறியவர்களுக்கு ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்) கிருபா (சங்கர் தாஸ்) சிறியவர்களுக்கு போதை பொருள் கொடுத்து தொழில் நடத்தி வருகிறார்கள். இதனால் பெஞ்சமின்க்கும் ஜோசப், கிருபா ஆகியோருக்கும் இடையே சண்டை வர கடைசியில் ஜோசப், கிருபா இருவரும் இணைந்து பெஞ்சமினை கொலை செய்துவிடுகிறார்கள்.
பெஞ்சமின் கொலை செய்யப்பட்ட பிறகு படம் மிகவும் பரபரப்பாக தொடங்குகிறது. இந்த கொடூர கொலை வடசென்னையில் செல்வா மற்றும் பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. பின், ஜோசப் ஏமாற்றப்பட கிருபா மிகப்பெரிய அரசியல்வாதியாக மாறுகிறார். தன்னை ஏமாற்றிய விரக்தியில் ஜோசப் செல்வத்தைத் (விஜய்குமார்) தூண்டிவிட்டு கிருபாவை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்.
செல்வத்திற்கு கால்பந்து விளையாட்டில் பிரியம் என்பதால் கால்பந்து கிளப்பில் சேர்க்க பணம் தருவதாக உறுதியளிக்கிறார். பிறகு கடைசியில் செல்வாவை வைத்து ஜோசப் கிருபாவை கொலை செய்தாரா? அல்லது கடைசியில் என்னதான் நடந்தது செல்வம் நினைத்த படி விளையாட்டு வீரராக ஆகினாரா? என்பது தான் படத்தின் கதை.
விமர்சனம்
“ஃபைட் கிளப்” என்ற தலைப்புக்கு ஏற்றபடி படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் மிரட்டலாக இருக்கிறது. சண்டை காட்சிகளை பார்க்கும்போது நமக்கு விருப்பத்தை எகிற வைக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காகவே படத்தின் ஒளிப்பதிவாளர் பிரிட்டோ அருமையாக வேலை செய்து இருக்கிறார். சண்டை காட்சிகளுக்கு எந்த அளவிற்கு துல்லியமான பின்னணி இசையை கொடுக்க வேண்டுமோ அதே அளவிற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அட்டகாசமான இசையை கொடுத்துள்ளார்.
ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!
அதைப்போல படத்தின் எடிட்டிங் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. இது தான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களாக அமைந்துள்ளது. நெகட்டிவ் என்றால் படத்தில் வரும் காதல் காட்சிகள் என்று சொல்லலாம். ஏனெனில், வேணுமென்றே காதல் காட்சிகள் படத்தில் வைத்தது போலவே தெரிகிறது. மற்றபடி, ஒரு தரமான ஆக்சன் படத்தை பார்க்கவேண்டும் என்றால் கண்டிப்பாக “ஃபைட் கிளப்” படத்திற்கு செல்லலாம்.