விஜய் மக்கள் இயக்கம் வேறு பரிமாணம் எடுக்கிறது – புஸ்ஸி ஆனந்த் பேட்டி!
பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட 1,000 பேர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், 31 வருடத்திற்கு முன்பு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது, 15 ஆண்டுக்கு முன் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இனி வரும் காலங்களில் அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம். அதற்கு ஏற்ற வகையில் செயல்படும் நோக்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்று விஜய் மக்கள் இயக்க ஐடி பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்ப பிரிவில் 3 லட்சம் பேர் செயல்பட்டு வருகின்றனர். ஐடி பிரிவு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. அடுத்தடுத்து பல்வேறு பிரிவினருடனும் ஆலோசனை நடத்த உள்ளோம் என்று கூறினார்.
பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடர்ந்து பல்வேறு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.