வலியால் துடித்துக்கொண்டிருந்த அஜித் ரசிகரைக் காப்பாற்றிய விஜய் ரசிகர்கள்…போலீஸார் பாராட்டு.!
விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும், நேற்று ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் 4 மணிக்கும் வெளியானது. இரண்டு படமும் அருமையாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று சேலத்திலுள்ள ஒரு பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் நேற்று நள்ளிரவு 1 மணி -க்கு ‘துணிவு’ திரைப்படம் வெளியானது. எனவே பல அஜித் ரசிகர்கள் அந்த முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக வருகை தந்தனர்.
கூட்டம் கூட்டமாக அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்கு தள்ளு முள்ளு செய்து கொண்டு சென்றனர். அப்போது ரசிகர் ஒருவர் திரையரங்குக்குள் செல்லும்போது கூட்ட நெரிசலில் அங்கிருந்த படியிலிருந்து கீழே விழுந்தார். அங்கிருந்த யாரும் அவரை கண்டுகொள்ளாமல் அவர் மீதே ஏறி படம் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர்.
நீண்ட நேரமாக வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த ரசிகரை வெளியில் ‘வாரிசு’ படம் பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்த விஜய் ரசிகர்களான நவீன், கவின், நற்குண ராஜ் ஆகியோர் ஓடிச்சென்று அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸை வரவைத்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கூட்ட நெரிசலில் கால் முறிவு ஏற்பட்டு மயக்கத்திலிருந்த அந்த அஜித் ரசிகர்க்கு தண்ணீர் கொடுத்து, மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவரது பெற்றோர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு காலை 4 மணிக்கு ‘வாரிசு’ படம் பார்க்கத் திரும்பி வந்தனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் வசந்தகுமார் என்பவர் நவீன், கவின், நற்குண ராஜ் ஆகியோரை அழைத்து பாராட்டினார்கள்.