இதனை செய்தாலே நமது படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.! வெற்றிமாறன் பேச்சு.!
மண் சார்ந்த கதைகளை படமாக எடுப்பதால்தான் தென்னிந்திய படங்களுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் இன்று இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அப்போது, தென்னிந்திய படங்களின் வெற்றி குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசினார்.
அதாவது, நம்முடைய அடையாளங்கள், தனித்துவங்கள், பெருமைகளை கொண்ட, மண் சார்ந்த கதைகளை படமாக எடுப்பதால்தான் தென்னிந்திய படங்களுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இதை செய்யாமல், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே படங்கள் எடுப்பதால்தான், பிற மொழி திரைத்துறையினரால் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்த முடிவதில்லை.
நம் மக்களால் கொண்டாடப்படும் படங்கள், சர்வதேச அளவில் ஏற்கப்பட்டு, ஆஸ்கர் வெல்வதை முன்னேற்றமாக பார்க்கிறேன். நம்முடைய கதைகளை நம் மக்களுக்காக சொல்லும்போது, அது உணர்வாக உலகளவில் ஏற்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெறுகிறது என்று கூறினார்.
கலைக்கு மொழி இல்லை, எல்லைகள் இல்லன்னு சொல்லுவாங்க. ஆனால், கலைக்கு நிச்சயமாக மொழி இருக்கு, கலாசாரம் இருக்கு, எல்லைகள் இருக்கு. ஆனால், கலையை நுகர்பவர்களுக்கு அந்த எல்லை இல்லை. அதனுடைய எல்லைக்குள் இருந்து அது செயல்படும்போது, கலை எல்லைகளை கடந்து போகும் என்று ஆஸ்கர் குறித்தும் சர்வதேச அங்கீகாரம் பெரும் படங்கள் குறித்தும் பேசினார் இயக்குனர் வெற்றிமாறன்.