சென்னைக்கு ஓடி வர “வாழை” தான் உதவி பண்ணுச்சு! மாரி செல்வராஜ் எமோஷனல்!
சென்னை : சிறிய வயதில் 400 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வருவதற்கு வாழை கொடுத்த பலம் தான் காரணம் என இயக்குனர் மாரிசெல்வராஜ் எமோஷனலாக பேசியுள்ளார்.
தன்னுடைய சிறிய வயதில் நடந்த உண்மை சம்பவத்தை வாழை படமாக இயக்கியுள்ள மாரி செல்வராஜுக்கு மக்கள் பாராட்டுகளை கொடுத்து வருகிறார்கள். படம் எமோஷனலாக இருக்கும் காரணத்தால் படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், வாழை படம் குறித்த எமோஷனலான பல விஷயங்களை மாரி செல்வராஜ் பேட்டிகளில் கலந்து கொண்டு பகிர்ந்து வருகிறார்.
அப்படி தான், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா? நானா? நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாரி செல்வராஜ் “வாழை தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது எப்போதும் வாழையை தூக்கிபோடமாட்டேன்” என சற்று எமோஷனலாகபேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் என்னுடைய 7,8 வயது இருக்கும்போதே வாழை சுமக்கும் வேலைக்கு சென்றுவிட்டேன். என்னுடைய அம்மா அப்போவே இந்த வேலைக்கு என்னை அழைத்து சென்றுவிட்டார். அப்போது வாழையை தூக்கவே ரொம்ப கடினமாக இருக்கும். எதுவுமே இல்லாத ரோட்டில் சுமந்து செல்வது வேற ஆனால், நாங்கள் சுமக்க போகும் இடத்தில் வாழை மரமாக இருக்கும். இடையில் அந்த வாழை தார் மரத்தில் சிக்கிவிட்டது என்றால் நமது கழுத்தே உடைந்துவிடும்” என்றார்.
சிறிய வயதிலே வேலைக்கு சென்ற சம்பவத்தை மாரி செல்வராஜ் கூறியதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கஷ்ட்டமான வேலைக்கு சென்று இருக்கிறாறே என கூறி வருகிறார்கள். நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ் தான் சிறிய வயதில் சென்னைக்கு வந்த கதை எப்படி என்பது பற்றியும் பேசினார்.
அது பற்றி பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் ” கிட்டத்தட்ட நான் 10 -ஆண்டுகள் வாழை தார் சுமக்கும் வேலையை செய்தேன். பிறகு 400 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு எதாவது வேலை பார்க்கவேண்டும் என வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். சென்னைக்கு வந்த பிறகு சினிமாவில் ஆர்வம் இருந்தது. அந்த பலங்கள் எல்லாம் எனக்கு கொடுத்தது எல்லாமே நான் சுமந்த வாழை தார் மட்டும் தான் காரணம்” எனவும் மாரி செல்வராஜ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபி நாத் ” இந்த வாழை தாரை நான் தூக்கி போடுங்கள் என்று சொன்னால் தூக்கிப்போடுவீர்களா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த மாரி செல்வராஜ் ” கண்டிப்பாக நான் போடவே மாட்டேன் என கூறினார். அதற்கு கோபி நாத் ” ஏன் தூக்கிபோட மாட்டீங்க? அந்த கஷ்ட்டத்தில் இருந்து வெளியே வந்தாச்சுல” என கேட்டார். அதற்கும் பதில் சொன்ன மாரி செல்வராஜ் ” அப்படி இல்லை..இன்னும் என்னுடைய பக்கத்துக்கு வீடுக்காரர் எல்லாம் இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே நான் எப்படி தூக்கிப்போட முடியும்?” எனவும் மாரி செல்வராஜ் கூறினார்.