“நம்ப வச்சு துரோகம் பண்ணிட்டாங்க”..மஞ்சள் வீரன் குறித்து டி.டி.எஃப் வாசன் குமுறல்!!
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டது எனக்கே தெரியாது என டிடிஎஃப் வாசன் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை : கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்க என்ற வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ யூடுயூபர் டி.டி.எஃப் வாசனுக்கு பொருந்தும் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இதுவரை பல சர்ச்சைகளைச் சந்தித்து இருக்கிறார். இருப்பினும், அவருக்கென்று 2k ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு பக்கம் அவரை ட்ரோல் செய்தாலும் மற்றொரு பக்கம் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவைக் கொடுப்பதை அவர்கள் நிறுத்தியதும் இல்லை.
இந்நிலையில், ஒரு வழியாகச் சர்ச்சைகள் முடிந்து டிடிஎப் மஞ்சள் வீரன் படத்தில் நடிப்பதன் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகிறார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதிலும் பிரச்சினை வந்து படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போகும் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்குப் பெரிய அதிர்ச்சியான குண்டை படத்தின் இயக்குநர் செல்அம் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
அதாவது, சென்னையில் இந்த படம் தொடர்பான செய்தியாளர்களைச் சந்திப்பில் இயக்குநர் செல்அம் ” TTF வாசனிடம் கால்ஷீட் கேட்ட போது சரியாக வரவில்லை, ஹீரோ ஒத்துழைக்கவில்லை. இதனால், அதே படம் வேறு ஹீரோ நடிப்பில் வெளிவரும் என” அறிவித்து இருந்தார். இதனையடுத்து, டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், டிடிஎஃப் இது குறித்து வேதனையுடன் படத்திலிருந்து வெளியேறியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ள டிடிஎஃப் வாசன் ” மஞ்சள் வீரன் படத்திலிருந்து என்னை நீக்கியது எனக்கு இன்று வரை தெரியவே தெரியாது. அது தொடர்பாக என்னிடம் இதுவரை யாரும் பேசக் கூட இல்லை. இது தொடர்பாக அவரிடம் பேசுவதற்கு நான் இயக்குநர் செல்-அம்மை தொடர்பு கொண்டால் கூட அவர் என்னிடம் பேசக் கூட தயாராக இல்லை.
படப்பிடிப்புக்கு நான் வரவில்லை என இயக்குநர் கூறியதை நான் கேள்விப்பட்டேன். படப்பிடிப்பு நடத்தாமல் அவர் இப்படிக் கூறியது கேட்கும்போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு நிறைய வேலைகள் இருந்த காரணத்தால் படத்தில் நடிக்க முடியவில்லை என அவர் கூறுகிறார். நான் அப்படி எங்கேயாவது சொன்னேனா? அப்படி வேலைகள் இருந்தால் நான் எதற்கு IPL படத்தில் நடிக்கப் போகிறேன்?
இந்த படத்துக்கான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும். இப்படியான பல துரோகங்கள் பார்த்து தான் மிகப்பெரிய வெற்றி நமக்கு கிடைக்கும் என கடவுள் நினைத்திருக்கிறார். அண்ணன் அண்ணன் என்று கூறிவிட்டு எனக்கு துரோகம் செய்துவிட்டார் ” எனவும் டிடிஎஃப் வாசன் வேதனையுடன் பேசியுள்ளார்.