இது எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம்.! -இயக்குனர் மணிரத்னம்
1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க , படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கான டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய மணிரத்தினம்” நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கல்கிக்கு . கல்லூரி படிக்கும்போது நான் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன் கிட்டதட்ட 40 வருடங்கள் ஆகிறது. இன்னமும் இது என் மனதைவிட்டு போகவில்லை. இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு அவர் பண்ண வேண்டியது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போடப்பட்டது. அவர் இப்படத்தை எங்களுக்காகத்தான் விட்டுவைத்தார் என்று இன்றுதான் எனக்குப் புரிந்தது.
இதைப் படமாக்க பலர் முயற்சி செய்துள்ளார்கள். நானே 1980, 2000, 2010 என மூன்று முறை முயற்சி செய்துள்ளேன். எனவே எவ்வளவு பொறுப்புகள் உள்ளன என்பது எனக்குத் நன்றாகவே தெரியும். இப்போது இதனை செய்து முடித்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இதைச் செய்து முடிக்க ரவிவர்மன் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்பக்கலைஞர்கள் என எல்லோரும் சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் பாதுகாப்பு உடைகளுடன் வந்து நடித்துக் கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி” என பேசியுள்ளார்.