அமரன் OTT ரிலீஸை தள்ளி போடுங்க… திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!
அமரன் படம் வெளியான 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 12 நாள்களில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், 250 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்த 4ஆவது நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார்.
முன்னதாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் இந்த பட்டியலில் இருந்தனர். படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக விமர்சனங்கள் இருந்த போதிலும், தியேட்டர்களில் இப்படம் இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓட்ட வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் என பட நிறுவனம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதாவது, படம் வெளியான 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இம்மாதத்திற்குள் வெளியாகவிருந்த இப்படத்தின் OTT வெளியீடு தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி வெளிநாட்டு சந்தையிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் லப்பர் பந்து படத்துக்கு அடுத்ததாக இந்த படத்துக்கு தான் இப்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.