எனக்கு நடந்த தொல்லை…”முன்னணி நடிகர்கள் யாரும் ஆதரவாக நிற்கவில்லை” – விசித்ரா வேதனை!
சென்னை : எனக்கு நடந்த தொந்தரவைப் பற்றிப் பேசியபோது முன்னணி நடிகர்கள் யாரும் ஆதரவாகப் பேசவில்லை என நடிகை விசித்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதிலிருந்து மலையாள சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி பேசி புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். கேரளாவைப் போல, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்கவேண்டும் கருத்துக்களையும், தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை விசித்ராவும் திரையுலக பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க கேரளாவைப்போலத் தமிழகத்திலும் கமிட்டி வேண்டும் என வலியுறுத்திப் பேசியுள்ளார். அது மட்டுமன்றி, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாக பேசியபோதும் தமிழ் சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்கள் ஆதரவாகப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்து இருக்கிறார்.
நடிகை விசித்ரா பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது “சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், அந்த படம் சம்பந்தமான பார்ட்டி ஒன்று நடந்தபோது அதில் கலந்துகொண்ட விசித்ராவை அந்த நடிகர் அறைக்கு அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த நடிகருக்கு தன்னுடைய பெயர் கூட தெரியாது, இருந்தாலும் தன்னை அறைக்கு அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்த அடுத்த நாளில் இருந்து அவருடைய ரூமிற்க்கு மது அருந்திவிட்டு சிலர் கதவை தட்டி தொந்தரவு கொடுத்ததாகவும் பேசியிருந்தார்.
விசித்ரா அந்த நடிகரின் பெயரையும், படத்தின் பெயரையும் கூறவில்லை இருந்தாலும், ரசிகர்கள் பலரும் விசித்ராவுக்கு ஆதரகவா குரல் கொடுத்தனர். சினிமாவை சேர்ந்த யாரும் பெரிதாக அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதனை மனதில் வைத்துக்கொண்டு, சென்னையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு, அளித்த பேட்டியில் வேதனையுடன் விசித்ரா பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ‘ எனக்கு நடந்த தொந்தரவை பற்றி நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசினேன். ஆனால், ஒரு சிலர் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்படி எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் யாரும் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை” என குற்றம்சாட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர் “கேரளாவைபோல பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க தமிழகத்திலும் கமிட்டி வேண்டும். ” எனவும் விசித்ரா தெரிவித்தார்.