கடவுளே அஜித்தே.! பொங்கலுக்கு சம்பவம் செய்யுமா விடாமுயற்சி? டீசர் எப்படி இருக்கு?
பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி பட டீசர் வீடியோ நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் இபபடத்தில் நடித்துள்ளனர் .
நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளியாகாததால் இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு அடுத்து அஜித் நடிப்பில் தயாராகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வெளியானது. ஆனால், விடாமுயற்சி படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற போஸ்டர்கள், ஷூட்டிங் வீடியோ தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை. இதனால் பொங்கல் தினத்திற்கு படம் வெளியாகுமா என்ற கேள்வி பலரது மனதில் இருந்தது.
இப்படியான சூழலில் நேற்று திடீர் அறிவிப்பாக விடாமுயற்சி டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி இரவு 11 மணியளவில் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது. படத்தின் டீசர் ஹாலிவுட் பட டீசர் போல விறுவிறுப்பாக இருந்ததாக இணையத்தில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்
நேற்று இரவு முதலே #VidamuyarchiTeaser எனும் ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. டீசரில் படத்தின் காட்சியமைப்புகள் பார்த்த சிலர் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருக்கிறது என இப்போதே கூற ஆரம்பித்து விட்டனர்.
பிரேக்டவுன் படத்தில் ஒரு தம்பதி காரில் சுற்றுலா செல்வார்கள். அப்போது கார் ஒரு இடத்தில் பழுதாகி நின்று விடும். அப்போது ஒரு டிராக்கில் மனைவியை அனுப்பிவிட்டு அருகில் உள்ள ஒரு கடையில் இருக்க சொல்லிவிடுவார் நாயகன். ஆனால் , அந்த கடையில் மனைவி காணாமல் போய்விடுவார். அவரை தேடும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமாக பிரேக் டவுன் படம் இருக்கும். அதே பாணியில் விடாமுயற்சி இருக்குமோ என்று இணையதளத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், சிலர், படத்தின் காட்சியமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் ஹாலிவுட் ஸ்டைலில் இருந்தாலும், படத்தின் இசைக்கு இன்னும் அனிருத் மெனெக்கெட்டிருக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது ட்ரெண்டாகி வரும் ‘கடவுளே அஜித்தே’ பாணியில் விடாமுயற்சி என பின்னணி இசையில் சேர்த்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். பின்னணி இசையில் அனிருத் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என இணையதளவாசிகள் கூறி வருகின்றனர்.