கத்தி குத்து விவகாரம்: ‘மும்பை காவல்துறையின் ஒரு தவறு, என் வாழ்வையே அழித்துவிட்டது’ – ஆகாஷ் கனோஜியா வேதனை!
நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் வேதனை தெரிவித்துள்ளார்.
மும்பை: நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்யப்பட்டு, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா வேதனை தெரிவித்துள்ளார்.
மர்ம நபரால் கத்தி குத்து சம்பவத்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான்.
இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. பின்னர், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சத்தீஸ்கரில் ரயிலில் இருந்து ஆகாஷ் கனோஜியா என அடையாளம் காணப்பட்ட நபர் சைஃப் அலிகான் தாக்குதல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், தானேவில் இருந்து மற்றொரு குற்றவாளியை போலீசார் கைது செய்த பின்னர் ஆகாஷ் கனோஜியா விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தால் வாழ்கை இழந்துவிட்டதாக ஆகாஷ் கனோஜியா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘மும்பை காவல்துறையினரின் ஒரு தவறு, சயீப் அலிகானுக்கு நடந்த தாக்குதலால், நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். சிசிடிவி-யில் காண்பிக்கப்பட்டவருக்கு மீசை இல்லை. எனக்கு மீசை உள்ளது.
அதைக்கூட கவனிக்காமல் நான்தான் அவரென கைது செய்துவிட்டனர். டிவியில் புகைப்படங்கள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டது. குடும்பமே அவமானத்தை சந்திக்கிறது, எனக்கு நீதி வேண்டும்அவரது வீட்டுக்கு முன்பு நின்று வேலை கேட்கப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.