இசை நிகழ்ச்சியில் பாடல் ‘அப்பாகிட்ட அனுமதி வாங்கியாச்சு’! கார்த்திக் ராஜா பேச்சு!
கார்த்திக் ராஜா : இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் கிங் ஆப் கிங்ஸ் 2024 என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இந்த இசை நிகழ்ச்சியை ‘பி.கே., என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், ‘யெஸ் பாஸ்’ நிறுவனமும் இணைந்து வழங்க இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜாவின் தந்தை இளையராஜாவின் பாடல்களும் பாட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுத் தான் இசை நிகழ்ச்சியில் பாட உள்ளேன் என செய்தியார்களை சந்தித்தபோது கார்த்திக் ராஜா கூறியுள்ளார். இது குறித்து பேசிய கார்த்திக் ராஜா ” முன்னதாக இந்த இசை நிகழ்ச்சியை நாங்கள் மலேசியாவில் நடத்த தான் திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், அங்கு நடத்தமுடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும். அப்பா இளையராஜாவுடைய பாடல்களும் பாடபோகிறோம். சரியாக காப்புரிமை குறித்து ஆய்வு செய்து எந்த பாடல்களை பாடலாம் என்பதை சரியாகவும் தேர்வு செய்து இருக்கிறேன். அப்பாவிடம் சரியான அனுமதி பெற்று தான் பாடல்களை பாட இருக்கிறேன். முக்கியமாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று பாடப்போகிறேன்.
இசை நிகழ்ச்சி 3 முதல் 4 மணி நேரம் நடைபெறும் கிட்டத்தட்ட 35 பாடல்கள் தேர்வு செய்து இருக்கிறோம். அனைத்தும் கண்டிப்பாக பிடிக்கும். இப்போது நான் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். அடுத்த 2 மாதங்களில் நான் இசையமைத்துள்ள 2 படங்கள் வெளியாக உள்ளது” எனவும் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.