போராட்டங்கள், தியாகங்கள்.. கவனம் ஈர்க்கும் ‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோ.!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “அமரன்” படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் மேக்கிங் குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வீடியோவில், காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிவகார்த்திகேயன் ராணுவ சீருடையில் இருக்கும் காட்சிகளைப் படக்குழுவினர் படமாக்குவதைக் காட்டுகிறது.
மேலும் அந்த காட்சிகளின் பின்னணியில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் (2013) திரைப்படத்தின் “அனுவிதைத்த பூமியிலே” என்ற பாடல் ஒலிக்கிறது. நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். போர்கள், போராட்டங்கள், தியாகங்களை நினைவு கூர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ‘அமரன்’ தீபாவளி ஸ்பெஷலாக அக்.31ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது.
மேஜர் முகுந்த வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த வரதராஜனாக நடிக்கிறார். இதுவரை இல்லாத வகையில், இந்த படத்தில் ராணுவ தோற்றத்தை ஏற்று நடிக்கிறார்.
இதற்கு முன்னதாக, காமெடி, லவ், ஆக்சன் என ஒரு குடும்ப ஆடியன்ஸை கவரும் வகையில், நடித்திருப்பார். முதல் முறையாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில், இதுவரை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் அவரது திரைத்துறை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாகவும் நடிக்கிறார். சி.எச்.சாயின் ஒளிப்பதிவு செய்ய, கலைவாணனின் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டீபன் ரிக்டரின் சண்டைக்காட்சியும் இடம்பெறும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.