வசூலில் சிக்ஸர் விளாசும் “லப்பர் பந்து”! பட்ஜெட்டை மீட்டு அசத்தல்!!
லப்பர் பந்து திரைப்படம் வெளியான 5 நாட்களில் மொத்தமாக 14 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, டிமாண்டி காலனி 2, வாழை ஆகிய படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வரிசையில் தற்போது லப்பர் பந்து படமும் இடம்பிடித்துள்ளது.
லப்பர் பந்து படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சம் கொண்டு கிராமப்புறங்களில் சுற்றி நகரும் கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்ட காரணத்தால் படம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம் பார்க்க குடும்ப ரசிகர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தி வருவதே படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு அதிகமாவது போல, படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளில் எதிர்பார்ப்பு இல்லாமல் இறங்கிய காரணத்தால் முதல் நாளில் குறைவான வசூல் தான் செய்திருந்தது. அதன்பிறகு கிடைத்த விமர்சனங்களைப் பார்த்துவிட்டு மக்கள் திரையரங்குகளுக்குக் கூட்டமாகச் செல்ல, நாள் ஒன்றுக்கு 1 கோடி 2.5 கோடி எனப் படம் வசூலைக் குவிக்கத் தொடங்கிவிட்டது.
எந்த அளவுக்கு வசூல் செய்திருக்கிறது என்றால் படம் வெளியாகி 1 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் படத்தினுடைய பட்ஜெட்டை வசூல் மூலம் மீட்டெடுத்துள்ளது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களில் மொத்தமாக 14.50 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் 30 கோடி வரை வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.