“ஹேமா கமிட்டி அதிர்ச்சியை தரவில்லை, அதில் நானும் ஒருவன்” – பகிர் கிளப்பும் பிரித்விராஜ்.!
கொச்சி : மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை என, நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை குறித்து, நடிகர் பிரித்விராஜ் கருத்து கூறியுள்ளார்.
மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘MeToo’ 2.0 வெர்ஷன் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. சமீபத்தில், வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளிப்படுத்தியது.
இது தொடர்பாக, கேரள திரைத்துறையில் முக்கிய நபர்கள் #MeToo குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக, மலையாள சினிமாவின் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் எந்த ஒரு கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், மல்லுவுட்டில் பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ள பிரித்விராஜ் சுகுமாரன், அந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கொச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “செல்வாக்கு மிக்க குழு என்று அழைக்கப்படுவோரிடம் இருந்து நான் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை என்பதால் அப்படியொரு பிரச்னையே நடக்கவில்லை என்று அர்த்தமல்ல.
நான் அதை அனுபவிக்கவில்லை, அவ்வளவு தான். ஆனால், மலையாள சினிமாவில் யாரேனும் இப்படி ஒரு குழுவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். அப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அது அகற்றப்பட வேண்டும். ஹேமா கமிட்டியின் அறிக்கை கண்டறிந்துள்ள விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டால், பதவியில் இருந்து விலக வேண்டும். புகாரில் உண்மை இருந்தால், அதற்கான தண்டனை முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொய் என்றால், அதற்கும் தண்டனை வழங்குமாறும் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புகார்கள் குறித்து மிகவும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘AMMA’ சரியாக செயல்படவில்லை. அதேநேரம், ‘ஹேமா கமிட்டி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு காரணம், அந்த கமிட்டி உருவாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன்’ “என்று ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.