“நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனம்”! நடிகை பார்வதி கடும் விமர்சனம்!
கேரளா : நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனமான விஷயமாக பார்க்கிறேன் என நடிகை பார்வதி காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் நடிகைகள் கொடுத்த பாலியல் புகார் எதிரொலி காரணமாக, நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். குறிப்பாக, கேரள நடிகர் சங்கம் (AMMA)-வின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து முழுவதுமாக நடிகர் சங்கம் கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில், நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது குறித்து, மலையாள திரைத்துறையைச் சேர்ந்த, பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், மரியான், தங்கலான் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி திருவோத்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது “கோழைத்தனமான விஷயமாகப் பார்க்கிறேன்” என தன்னுடைய பரபரப்பான கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்துப் பேசிய பார்வதி திருவோத்து ” முதலில் நான் நடிகர் சங்கம் கலைக்கப்பட்ட செய்தியைக் கேட்டபோது, அவர்கள் எவ்வளவு கோழைகள் என்று தான் நினைத்தேன். ஏனென்றால், ஒரு பொறுப்பான நிலையில், இருந்த அவர்கள் இப்படியான ஒரு முடிவை எடுத்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பதில் சொல்ல முடியாமல் தான் அவர்கள் இப்படியா ஒரு முடிவை எடுத்துள்ளார்கள்.
பிரச்சனைக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்றாலும் கூட அரசாங்கத்துடன் இணைந்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் ஒரு சிறிய நகர்வையாவது எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர் ” இந்த நடிகர் சங்கம் தான் நடிகைகள் வாய்த்த பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியே சொல்வதற்கு முன்பு வரை, அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை என்று வெளிக்காட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தது.
அம்மா சங்கத்தில் உள்ளவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அங்கு நமது தேவைகளைப் பற்றிப் பேச நடிகைகளான எங்களுக்கு உரிமை இல்லை. எனவே, இதற்குச் சிறந்த தலைமை வந்தால் மட்டும் தான் இதற்குச் சரியான ஒரு முடிவாக இருக்கும். வரும் காலத்தில் நல்ல தலைவரைத் தேர்வு செய்யவேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.