இரண்டாவது பாகத்துக்கு விழுந்த அடி! இந்தியன் 3 குறித்து லைக்கா எடுத்த முடிவு?
இந்தியன் 3 திரைப்படம் நேரடியாக அடுத்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இந்தியன் முதல் பாகம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் எப்போதும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முதல் பாகம் வெளியான சமயத்திலிருந்து 2-வது பாகம் வெளியாகும் வரை படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த சேனாதிபதி கதாபாத்திரத்தின் மீது பெரிய மரியாதையை ரசிகர்கள் வைத்திருந்தார்கள்.
ஆனால், படத்தின் இரண்டாவது பாகம் வெளியான பிறகு முழுவதுமாக அந்த கதாபாத்திரம் ட்ரோல் செய்யப்படும் வகையில் மாறிவிட்டது. அதற்கு முக்கியமான காரணமே படத்தில் லாஜிக் இல்லாதது போல சில காட்சிகளை வைத்தது என்றே சொல்லலாம். படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்தது.
இரண்டாவது பாகம் வெளியாகும் சமயத்திலே படத்தின் மூன்றாவது பாகமும் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் மும்மரமாகப் போய்க்கொண்டு இருப்பதாகக் கூறி அந்த படத்தையும் படக்குழு ப்ரோமோஷன் செய்தார்கள். இருப்பினும், இரண்டாவது பாகம் வெளியானபிறகு மூன்றாவது பாகமா ஆள விடுங்கடா சாமி என்கிற அளவுக்குப் பேசத்தொடங்கிவிட்டார்கள்.
எனவே, படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் கண்டிப்பாக 3-வது பாகத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டால் சரியாக இருக்காது எனத் திட்டமிட்டுப் படத்தை ஓடிடியில் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 3 படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே, இந்தியன் 3 திரைப்படம் நேரடியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.