பெங்காலித் திரைத்துறை… ‘விபசார விடுதி’ என பகீர் கிளப்பும் நடிகை.!
மேற்கு வங்கம் : வங்காளத் திரைத்துறையிலும் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. ‘பெங்காலித் திரைத்துறையே விபசார விடுதிதான்’ என நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பெண் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பதாக வெளிச்சம் போட்டு காட்டியது நீதிபதி ஹேமா கமிட்டி. அந்த கமிட்டி அதற்கான முழு அறிக்கையும் முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்தது.
இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த வேலையில், மலையாளத் திரையுலகில் நடந்த காஸ்டிங் கவுச் சம்பவங்களை ஹேமா கமிட்டி அம்பலப்படுத்தியது போல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதேபோன்ற விசாரணையைத் தொடங்குமாறு நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி வலியுறுத்தினார்.
ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்பொழுது அங்கு மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கீகரிக்கப்படாத மாணவர் அமைப்பைச் சேர்ந்தோர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி தனது இன்ஸ்டா பதிவில், ” ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் துறையில் பாலியல் துன்புறுத்தலை அம்பலப்படுத்தியுள்ளது. பெங்காலி திரைப்படத் துறை ஏன் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
வெளியான குற்றசாட்டுகள் அனைத்தும் என் அனுபவங்களைப் போலவே இருந்தன. மேலும் எனக்கு தெரிந்த பல நடிகைகள் இதுபோன்ற மோசமான அனுபவங்களை சந்தித்திருக்கிறார்கள். ஆசை ஆசையோடு சினிமாவுக்கு வரும் இளம் நடிகைகளுக்கு இங்கு என்ன மாதிரியான பாதுகாப்பு கொடுக்க முடியும். பெங்காலி திரையுலகம் சர்க்கரை பூசப்பட்ட விபச்சார விடுதியாக மாறி வருகிறது.
கேரள அரசைப் போலவே மம்தா பானர்ஜியும் கமிஷன் அமைக்க வேண்டும். ஆனால், இதற்கு சம்பந்தமானவர்கள் எந்தவொரு பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இது போன்ற கேவலமான எண்ணங்களை கொண்ட ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எந்தத் தடையும், தண்டனையும் இல்லாமல், இங்கு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கின்றனர். அவர்களின் முகமூடி சமூகத்தின் முன் அவிழ்க்கப்பட வேண்டும்.
இத்தகைய கொடூரமானவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். இந்த அரக்கர்களுக்கு எதிராக நிற்க என் சக நடிகைகளை நான் அழைக்கிறேன். நீங்கள் அனைவரும் நடிக்க வாய்ப்பு கிடைக்காதோ என்று பயப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு காலம் அமைதியாக இருப்பீர்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இவரது பதிவு வங்காள திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில், பிரபல மலையாள இயக்குனருக்கு எதிராக மூத்த பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து சக்ரவர்த்தியின் இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மம்தா பானர்ஜி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.