ஓய்ந்தது தலைவலி .! தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கேரளாவில் அதிரடி கைது!!
தமிழ் ராக்கர்ஸ் : தமிழ் சினிமா குறிப்பாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இருந்து வந்தது. ஒரு திரைப்படத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் செலவு செய்து படம் எடுத்து திரையிட்டால் இத்திரைப்படத்தை அடுத்த ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது.
இதனால், தற்போது உள்ள காலத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் எளிதாக மொபைல் போனிலே ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை பார்த்து விடுகின்றனர். இதனால் திரையரங்கிற்கு கூட்டம் வராமல் பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
பல வழக்குகளை திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த இணையத்தின் மீது தொடுத்துள்ளனர், ஆனால், அதனால் எந்த ஒரு பயனும் கிடைத்ததில்லை. இந்நிலையில், புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மினான மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இவர் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் இருக்கும் ஏரியஸ் தியேட்டரில் நடிகர் தனுஷ் நடித்த சம்பத்தில் வெளியான ராயன் திரைப்படத்தை படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது சைபர் க்ரைம் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை தென்னிந்திய இயக்குனரும் மற்றும் நடிகருமான பிருத்வி ராஜின் மனைவி கொடுத்த புகாரில் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதிய படங்களின் முதல் நாள் காட்சிகளிலேயே இருக்கையில் சிறிய கேமரா பொருத்தி வைத்து வீடியோ எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக புதிய படங்களை முதல் நாளிலையே பதிவேற்றம் செய்வதாகவும், ஒவ்வொரு படத்திற்கும் 5ஆயிரம் ரூபாய் கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் மட்டுமின்றி டெலிகிராம் ஆப்பில் தனியாக பக்கம் உருவாக்கி அதிலும் பகிர்ந்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை சைபர் க்ரைம் போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.