அண்ணன் செய்த செயலால் தடை பட்ட தம்பியின் படம் !
சமீபத்தில் சூர்யா செய்த காரியத்தால் கார்த்தி நடித்து வரும் கடைக்குட்டி சிங்கம் திரைபடத்திற்கு தடை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என தலைப்பு வைக்கப்பட்டது.
சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகம் சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.
இந்நிலையில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படப்பிடிப்பைக் காண தன் மகன் தேவ் உடன் வந்த சூர்யா, ரேக்ளா ரேஸ் பந்தயத்தை 4 வினாடி வீடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். இது இணையத்தில் வைரலானது. ஆனால், இங்குதான் சர்ச்சை ஆரம்பித்தது.
மாடுகளை துன்புறுத்துவதாகக் கூறி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது இந்த ரேக்ளா ரேஸ் பந்தயத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டோடு சேர்த்து ரேக்ளா ரேஸ் மீதான தடையும் நீக்கப்பட்டது. ஆனால், படத்தில் ரேக்ளா ரேஸ் காட்சிகள் இடம்பெற வேண்டும் என்றால் விலங்குகள் நல வாரியத்தின் முறையான அனுமதி பெற வேண்டும். ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு அதற்கான முறையான அனுமதி பெறாமல் ரேக்ளா ரேஸ் காட்சிகளை படமாக்கியுள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.