அஜித் ரசிகர்களுக்கு ஷாக்., ‘அது’ போலி செய்தியாம்., வெளியான அதிகாரபூர்வ தகவல்.!
அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையதள பக்கம் போலியானது என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார், தனது நடிப்பு துறையை போல தனக்கு பிடித்த கார் ரேஸிங் துறையிலும் தற்போது மீண்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் ஐரோப்பா, துபாய் கார் ரேஸிங் பந்தயத்தில் அவரது ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது.
இதற்காக அஜித்குமார் ரேஸிங் எனும் அணியை அவர் துவக்கியுள்ளார். அந்த அணி மேற்கொண்ட பயிற்சி வீடீயோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் கூட தமிழக விளையாட்டு துறையின் (SDAT) சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதற்கு துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இப்படியான சூழலில் ajithkumarracing.com எனும் இணையதள பக்கம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. அதுதான் அஜித்குமார் ரேஸிங் அணியின் இணையதள பக்கம் என்றும் செய்திகள் வெளியாகின. உடனே அதனையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அது அதிகாரபூர்வ இணையதள பக்கம் இல்லை என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “ajithkumarracing.com என்ற இணையதளம் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல. எங்கள் அதிகாரபூர்வ பக்கங்கள் மூலம் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். தயவுசெய்து இந்த தளத்தை யாரும் கவனத்தில் கொள்ள வேண்டாம்.” எனப் பதிவிட்டுள்ளார்.