கதை திருட்டு சர்ச்சை : புகார் அளித்த எழுத்தாளர்! நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!
சென்னை : ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘வாழை’ திரைப்படம் என்னுடைய கதை என எழுத்துளார் சோ. தர்மன் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட்-23ம் தேதி ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்ப்பில் ஆழ்த்தியது. மேலும், இயக்குநர் மாரி செல்வராஜின் சிறு வயதில் நடந்த உண்மையைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று மாரி செல்வராஜ் படத்தின் ப்ரோமஷனில் கூறி இருந்தார். இதனால், பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பொதுவாகவே ஒரு படம் வெளியானது என்றால், அது மிகவும் நன்றாக இருக்கிறது என்றால் அது எனது கதை என யாராவது முன்வந்து பேசுவது தமிழ் சினிமாவின் ஒரு கலாச்சாரம் என்றே கூறலாம். அதன்படி நேற்று எழுத்தாளர் சோ. தர்மன், தனது “வாழையடி ….” எனும் சிறு கதையிலிருந்து தான் “வாழை” படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் உருவாக்கமாகப் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள் வந்தது.
வாழை படம் பாருங்கள் உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று “வாழை” படம் பார்த்தேன். என்னுடைய “வாழையடி……”என்கிற சிறுகதை. என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது.
ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோசப்பட்டுக் கொள்கிறேன் .ஒரு படைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய “நீர்ப் பழி” என்கிற சிறுகதைத் தொகுப்பில் 2-ஆம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.
கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. “வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்.”என்று ஆனால், என்னை வாழை வாழ வைக்கவில்லை”, என்று பதிவிட்டிருந்தார். இவர் பதிவிட்ட இந்த பதிவால் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜூக்கு கேள்விகள் எழுந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போது தான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி”, என பதிவிட்டிருந்தார். மேலும், அந்த சிறுகதையின் லிங்கையும் பகிர்ந்து அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள் என்று கூறியுள்ளார்.
வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி❤️
—
வாழைhttps://t.co/VRFo53NxFn— Mari Selvaraj (@mari_selvaraj) August 28, 2024