அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி இறுதிச் சடங்கு!
மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். கடந்த 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் போனி கபூரும் ஓட்டல் ஊழியர்களும் அவரை மீட்டு அருகில் உள்ள ரஷித் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஸ்ரீதேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. குளியலறை தொட்டியின் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணைகள் முடிந்து ஸ்ரீதேவியின் உடல் நள்ளிரவு மும்பை கொண்டு வரப்பட்டது. பல்வேறு திரை நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.
இன்று காலை முதலே ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஷாருக்கான், பர்கான் அக்தர், ரேகா, ராணி முகர்ஜி, கேத்ரினா கைப், அனுபம் கெர், ஜெயப்பிரதா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலத்தினர்.
பின்னர் ஸ்ரீதேவியின் இறுதிச் ஊர்வலம் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையம் வரை நடந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீதேவியின் உடல் வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஸ்ரீதேவியின் உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதை செய்யப்பட்டது. அதன்படி மூவர்ணக் கொடி உடலில் போர்த்தப்பட்டது. மகாராஷ்டிர போலீஸார் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஸ்ரீதேவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.