பாலியல் வழக்கில் சிக்கிய சித்திக்! கைதாவதற்கு முன்பே முன்ஜாமீன் வாங்க திட்டம்?
திருவனந்தபுரம் : சித்திக் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பற்றி எரியும் தீயில் எண்ணெண்யை ஊற்றுவது போல, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருகிறார்கள். இதனால், மலையாள சினிமாவையே பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் சூழலில், இதன் எதிரொலியாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று முழுவதுமாக கலைக்கப்பட்டது.
பாலியல் தொடர்பான புகார்கள் வேகமெடுத்து வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு மும்மூரம் காட்டி வருகிறது. அதன் ஒரு, பகுதியாக நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், மலையாள நடிகரும், நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளரருமான சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த ரேவதி சம்பத் பேசும்போது ” கடந்த, 2016 ஆம் ஆண்டு சித்திக் தனக்குப் பட வாய்ப்பு தருவதாகக் கூறி, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டளுக்கு அழைத்து தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லைக் கொடுத்ததாக” பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடிகர் சித்திக் நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். இந்த சூழலில், நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், சித்திக் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கும் நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்பே சித்திக் முன் ஜாமீன் வாங்க முயற்சி செய்வதாக மலையாள செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியீட்டு வருகிறது.
பாலியல் வழக்கில் சிக்கியிருக்கும், நடிகர் சித்திக் முன்ஜாமீன் பெற முயற்சி தொடங்கியுள்ளார். இது சம்பந்தமாக, கொச்சியில் வழக்கறிஞர்களுடன் சித்திக் கலந்து பேசி இருக்கிறாராம். அதில், முதற்கட்ட திட்டமாக, உயர் நீதிமன்றத்தை முன் ஜாமீனுக்காக அணுகுவதுதான் முடிவெடுத்துள்ளாராம். இருப்பினும், அவருக்கு முன் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். ஏனென்றால்,நடிகை அளித்த புகாரின் பேரில், அருங்காட்சியகம் போலீசார் சித்திக் மீது பாலியல் மற்றும் மிரட்டல் பிரிவில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.