சாவர்க்கர் சர்ச்சை : ‘என் தவறுக்கு வருந்துகிறேன்’ மன்னிப்பு கோரிய இயக்குநர் சுதா கொங்கரா!
சுதா கொங்கரா : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுதா கொங்கரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “நான் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளேன், எனவே எனக்கு வரலாற்று உண்மைகள் எப்போதும் ஆவலுக்குரியவை. அப்படி நான் படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு முறை என் ஆசிரியர் சாவர்க்கரைப் பற்றிய ஒரு கதையைப் சொன்னார். சாவர்க்கர் ஒரு மிகப் பெரிய தலைவர் என்றும் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவர் என்றும் கூறினார்.
அவர் தனது மனைவியுடன் திருமணம் முடிந்த பின் மனைவியின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த முயற்சித்தார். அந்த காலத்தில், பெண்கள் பள்ளிக்குச் செல்வது அரிது, பலருக்கும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதிலேயே அதிக விருப்பம் இருந்தது. சாவர்க்கர் தனது மனைவியிடம் படிக்க வேண்டும் என்று கூறியபோது, அவருடைய மனைவி அதை மறுத்து, வீட்டில் இருக்க விரும்பினார். பின்னர் அவள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, தெருவில் உள்ள சிலர் அவரை கிண்டல் செய்தனர்.
இது அவருடைய மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது, மேலும் ‘நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன்’ என்று அழுது கூறியிருக்கிறார். அதற்கு சாவர்க்கர், பொறுமை இழக்காமல், தனது மனைவியைப் பள்ளிக்குச் சென்று கல்வி பெற ஊக்குவிக்க முயற்சித்தார். இந்தச் செயல் சரியா, தவறா என்பதில் எனக்கு சந்தேகம் எழுந்தது. அதிலிருந்து பல்வேறு கேள்விகள் எனக்குள் தோன்றின.” என கூறியிருந்தார்.
சுதா கொங்கரா இப்படி பேசியது வைரலாக பரவிய நிலையில், இந்த அம்மா சொல்லும் வரலாற்று தகவல்களுக்கும் சாவர்க்கருக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. என விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், தவறுக்கு வருந்துவதாக இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான்.
எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என கூறியுள்ளார்.