ராதிகா ஏன் இந்த புகாரை அப்போதே சொல்லவில்லை? சரத்குமார் விளக்கம்.!
நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பாலியல் தொல்லைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை : மலையாள படப்பிடிப்பின் போது கேரவன்களில் மறைக்கப்பட்ட கேமராக்களிலிருந்து பெறப்பட்ட வீடியோப் பதிவுகளை அந்த இடத்தில் உள்ள ஆண்களால் பார்க்கப்பட்டதாவும், இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது ஆடைகளை மாற்ற ஹோட்டல் அறையை மட்டுமே பயன்படுத்தியதாக கூறி பரபரப்பை கிளப்பினார் நடிகை ராதிகா.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதால், மலையாளப் படத்தில் பணியாற்றிய தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்ததாகவும் அந்நிகழ்வை ஒரு விளம்பரக் குறிக்கோளோடு தான் வெளிப்படுத்தவில்லை என்று நேற்றைய தினம் ராதிகா விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பிறந்தநாள் விழாவில், பாஜக முக்கிய நிர்வாகி சரத்குமார் கலந்து கொண்டார்.
இந்த விழாவின்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக பிரமுகர் சரத்குமார், ஹேமா கமிட்டி பற்றியும், ராதிகா ஏன் இப்பொழுது அந்த தகவலை வெளிப்படுத்தினார் என்பதற்கும் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ” ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு பக்கத்தை நான் இன்னும் படிக்கவில்லை. இதுவரை அறிக்கையில் 160 பக்கத்தை படித்துவிட்டேன் என்று கூறி அது பற்றிய சாராம்சத்தை விளக்கினார்.
கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை. ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிபொத்தாம் பொதுவா சொல்லிவிட முடியாது. சினிமா துறையில் உள்ள பிரச்னைகளை அறிய இந்தியாவில் முதன் முறையாக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
கேரளாவில் படப்பிடிப்பு ஒன்றில் கேரவனில் கேமரா வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதுபற்றி அப்போதே ஏன் புகார் கூறவில்லை? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சரத்குமார் அளித்த விளக்கத்தில், ‘என் மனைவிக்கு கடந்து போகக்கூடிய சக்தி இருந்ததால், பாலியல் புகாரை அப்போதே சொல்லாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அந்த பக்குவம் இருக்காது’ .
நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை சிறப்பானது, அதை முழுமையாக வரவேற்கிறேன் என்றார்’ .
சினிமா துறை மட்டுமல்ல, காவல்துறை உட்பட பல இடங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
நிர்பயா கொலை, கொல்கத்தா சம்பவம் போன்ற விஷயங்களுக்கு காரணமென்ன என்று பார்த்தால், ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்பது தான். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி தான் நான் நினைப்பேன்.
பிக் பாஸ் நடிகை ஒருவர் பாலியல் புகார் உங்களிடம் அளித்ததாகவும், அதற்கு நீங்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லையாம்? என கேள்வி எழுப்பியதற்கு சரத் குமார், ” நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிக் பாஸ் நடிகை யாரும் என்னிடம் பாலியல் தொடர்பாக புகார் அளிக்கவில்லை.
நான் சாதாரண தலைவன் கிடையாது. அப்படி யாரும் என்னிடம் புகார் கூறவில்லை. அப்படி கூறினால் உடனிடயாக நடவடிக்கை எடுக்க கூடிய ஆளு என்றார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே குற்றச்சாட்டு உள்ளது. நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தால் தவறுகள் நடைபெறாது என்று கூறினார்.