ஒரே மேடையில் ‘ரெட்டை கதிர்கள்’! ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!
கோவை : கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
96 எனும் காவிய படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் மெய்யழகன் படத்தில் இணைந்துள்ளனர். படம் கிராமத்து கதைக்களத்தை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக்கு கிராமத்து படங்கள் என்றாலே தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கும். அதற்க்கு முக்கியமான காரணமே இதற்கு முன் அவர் நடித்த கிராமத்து படங்களின் வெற்றி தான் காரணம். குறிப்பாக பருத்தி வீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம், விருமன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
இதன் காரணமாகவே, கார்த்தி தொடர்ச்சியாக நல்ல கிராமத்து கதைகள் கிடைத்தால் நடிக்க மறுப்பதில்லை. அப்படி தான் தற்போது, மெய்யழகன் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியீட்டின் ஒரு மாதத்திற்கு முன்பே படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை படக்குழு நடத்தவுள்ளது.
அதன்படி, படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஆக 31-ஆம் தேதி கோவை கொடிசியா ஹாலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தினை நடிகர் சூர்யா தன்னுடைய 2 டி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள நிலையில், அவரும் இசை வெளியீட்டு விழாவில் ஜோதிகாவுடன் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, கார்த்தி இருவரும் ஒரே மேடையில் இருந்தாலே அந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருக்கும். குறிப்பாக, கடைசியாக கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூர்யா கார்த்தியை பார்க்கவே பொறாமையாக இருக்கும் என்னிடம் பலர் நான் உங்களுடைய தம்பியின் பெரிய ரசிகன் என்று கூறுவார்கள் என பல விஷயங்களை பேசி விழாவிற்கு வந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். எனவே, அதைப்போலவே அவர் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.