புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!
ஐதராபாத்தில் 'புஷ்பா-2' திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதும் செய்தனர். பின்னர், மறுநாளே ஜாமீனில் விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜாமீனில் வெளிவந்த நடிகர் அல்லு அர்ஜுன், “எனக்கும் அந்த பெண் உயிரிழப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. இந்த சம்பவம் குறித்து மேலும் பேச விரும்பவில்லை என்று கூறியதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்திற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய நான் உள்ளேன்” என்று ஆறுதல் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.