ரூ.621 கோடி., ஆல் டைம் ரெக்கார்டு! புஷ்பா-2வின் மிரட்டல் வசூல் ரகசியம் என்ன?
புஷ்பா 2 திரைப்படம் நேற்று வரை உலகம் முழுக்க ரூ.621 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2ஆம் பாகத்தின் பிரமாண்ட ஆக்சன், கமர்சியல் பேக்கேஜ் என பக்கா பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்ததால் வசூலில் சக்கை போடு போடுகிறது.
வசூல் நிலவரம் :
இதுவரை இந்தியாவில் மட்டுமே சுமார் 520 கோடியை கடந்து உலகம் முழுக்க 600 கோடி வசூலை கடந்துள்ளது புஷ்பா 2. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதிவேகமாக 500 கோடி வசூல் கடந்த இந்திய திரைப்படம் எனும் வசூல் சாதனையை இப்படம் படைத்ததாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து நேற்று படக்குழு வெளியிட்ட தகவலின்படி புஷ்பா2 திரைப்படம் ரூ.624 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இப்படம் ரிலீசுக்கு முன்பான பிரீமியர் காட்சிகளிலேயே ரூ.10.65 கோடி வசூலை கடந்தது. அடுத்து, முதல் நாள் வசூல் ரூ.164.25 கோடியாக இருந்தது. 2ஆம் நாளில் 93.8 கோடியும், 3நாளில் 119.25 கோடியும் இந்தியாவில் மட்டும் வசூல் செய்திருந்தது. 4ஆம் நாளில் புஷ்பா 2 இந்தியாவில் மட்டும் ரூ.141.5 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் மட்டும் புஷ்பா 2 ரூ.529.49 கோடி வசூல் செய்தது என்றும், உலகம் முழுக்க ரூ.620 கோடி வசூலை கடந்தது என படக்குழுவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .
புஷ்பா 1 :
இத்தனை கோடி வசூலுக்கு காரணம் என்ன என்பதை பார்க்கையில், அதற்கு முதல் பாகம் கொடுத்த தாக்கம் தான் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் இருந்த கதையமைப்பு, கமர்சியல் படமாக இருந்தாலும் காட்சியமைப்புகள் கொடுத்த யதார்த்த பிரமிப்பு இதில் மிஸ்ஸிங் என்றாலும் கமர்சியல் மசாலாவை அதிகளவில் தூவி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது புஷ்பா 2.
முதல் பாகத்தில் சாமானிய மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்து அடுத்தடுத்த (சற்று நம்பும்படியான) காட்சிகளில் முன்னேறுவது போல காட்டி இருப்பார் இயக்குனர் சுகுமார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அது மிஸ்ஸிங் என்று தான் கூற வேண்டும். இருந்தாலும், முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் முதல் வாரத்திற்கு ரசிகர்களை கட்டிபோட்டுவிட்டது. அதனால் வசூலிலும் சக்கை போடு போடுகிறது புஷ்பா 2.
தூக்கலான கமர்சியல் மசாலா :
ரசிகர்களை கொண்டாட வைப்பதையும், நீண்ட ஆக்ரோஷமான சண்டை காட்சிகளுக்கும், ஒரு சில செண்டிமெண்ட் காட்சிகளுக்கும், சற்று தூக்கலான கிளாமர் காட்சிகளுக்கும் இயக்குனர் ரெம்பவே மெனக்கெட்டுள்ளார். அதில் நிச்சயமாக வெற்றியும் கண்டுள்ளனர் இயக்குனர் சுகுமார் மற்றும் ‘புஷ்பா’ அல்லு அர்ஜுன். எங்களுக்கு லாஜிக் வேண்டாம், படம் எவ்வளவு நீளமாக (3 மணி 20 நிமிடம்) இருந்தாலும் ஆக்சன் கமர்சியல் மசாலா இருந்தால் போதும் என நினைக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை புஷ்பாக்களின் வசூலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றே கூற வேண்டும். அதனால் தான் என்னவோ, லாஜிக் பார்க்கும் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களின் வசூலை ஒப்பீடு செய்கையில் வசூல் சற்று குறைவாக இருக்கிறது.