“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!
விடாமுயற்சி படம் வெளியாவதன் காரணமாக தன்னுடைய டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு பதிலாக வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ரிலீஸ் தேதி தள்ளி செல்வதற்கு முக்கியமான காரணமே அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் என்பதால் தான். திடீரென, விடாமுயற்சி படமும் பிப்ரவரி 6-ஆம் தேதி தான் வெளியாகும் என படத்தின் டிரைலரை வெளியீட்டு படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
விடாமுயற்சி படம் வெளியானால் கண்டிப்பாக 2 வாரம் எந்த படங்கள் இறங்கினாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வசூலை ஈட்டமுடியாது என்பதால் டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தெரிகிறது. பிரதீப் ரங்கநாதனும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தல வந்தா தள்ளி போயி தான ஆகணும்
பிப்ரவரி 21 முதல் டிராகன்” என கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே தனுஷ் இயக்கி இருக்கும் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ” திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதே தேதியில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
எனவே, இப்போது பிப்ரவரி 21-ஆம் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படமும் ஒரே தேதியில் வெளியாகவுள்ளது. இதனால் எந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் கிடைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.