பின்னணி பாடகர் வேல்முருகன் கைது! காரணம் என்ன?
Velmurugan : சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில் பாடகர் வேல்முருகன் கைது.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படைகளை பாடி இருக்கும் பிரபலமான பாடகர் வேல் முருகன் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக சென்று கொண்டு இருந்த சமயத்தில் அப்போது அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் இரும்பு தடுப்பு வைத்து சாலை அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த வழியாக செல்ல பாடகர் வேல் முருகன் முயற்சி செய்த நிலையில், அங்கு பணியில் இருந்த துணை மேலாளர் வடிவேலு என்பவர் இந்த பகுதியில் செல்ல முடியாது மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டி இருக்கிறது என்று கூறி கண்டித்தாராம். இதனால் பாடகர் வேல் முருகனுக்கும் அவருக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்றதாம்.
பின் ஒரு கட்டத்திற்குமேல் ஆத்திரம் அடைந்த பாடகர் வேல் முருகன் அதிகாரியை தாக்கிவிட்டு, ஆபாச வார்த்தைகளை பேசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விருகம்பாக்கம் போலீஸில் வேல் முருகன் மீது அந்த அதிகாரி புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபல பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்தனர்.
ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேல் முருகனை கைது செய்த நிலையில், விசாரணை மேற்கொண்டு இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து, எழுதி வாங்கி ஜாமீனில் விடுதலை செய்தனர்.