மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை.. சிபிஐ விசாரிக்கக் கோரி மனு!
மலையாள நடிகைகளின் புகார்கள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்திவரும் நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற மனுத் தாக்கல் செயப்பட்டு இருக்கிறது.
சினிமா துறையில் பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிபிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பெண்நடிக்க நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்ய, 2017 இல் ஹேமா கமிட்டி குழு கேரள அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.
அந்த குழுவால், மலையாள துறையில் நடைபெறும் துன்புறுத்தல்கள் குறித்த அறிக்கை ஒன்று கடந்த ஆகஸ்ட் 19, 2024 அன்று வெளியிடப்பட்டது. பாலியல் துன்புறுத்தல், பாலின பாகுபாடு, பணியிடத்தில் பாதுகாப்பின்மை, போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது, ஊதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சினிமா துறையில் உள்ள பெண்கள் எதிர்கொள்வதாக ஹேமா கமிட்டி குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்களான வழக்கறிஞர்கள் இருவர், அந்த அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது மற்றும் தனியுரிமை என்ற போர்வையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காதது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பக்கங்களில் ஏதேனும் இருந்தால் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.