காப்பான் படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி! ஐகோர்ட் அதிரடி!
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர், இப்படத்தினை வெளியிட தடை விதிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தான் 10 ஆண்டுகளாக சினிமா துறையில் கதை எழுதியுள்ள வருவதாகவும். அதன்படி, 2014-2016-ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ கதையை எழுதியதாகவும் கூறியுள்ளார். அந்த கதையின் படி, பத்திரிக்கை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும் போது, விவசாயம், நதிநீரிணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மைகள் குறித்து எடுத்துரைப்பார்.
இந்த கதையை சார்லஸ் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறியதாகவும், கதையை நன்கு உள்வாங்கிய இயக்குனர், எதிர்காலத்தில் இக்கதை படமாகும் போது தனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததாகவும், அதற்காக ஆவலுடன் காத்திருந்ததாகவும் எழுதியுள்ளார்.
இந்த கதையை கே.வி.ஆனந்த் அப்படி எடுத்து சரவெடி என்ற தலைப்பை மாற்றி, காப்பான் என்ற பெயரில் இயக்கியுள்ளதாகவும், எனவே, இப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், ஜான் சார்லஸின் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் 20 தேதி வெளியாகவிருந்த காப்பான் திரைப்படம் எந்த தடையும் இல்லாமல் வெளியாகும்.