ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு நடிகர் விஜய் ஆண்டனி கேஷுவலாக பதில் கொடுத்துள்ளார்.
சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்ட்டில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவது போல் இருப்பதால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, திரைத்துறையில் இருந்து முதல் குரல் வந்திருக்கிறது.
அது வேற யாருமல்ல நடிகர் விஜய் ஆண்டனி தான். அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி வைத்து நாயை மையமாக வைத்து ‘கூரன்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த பட இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய் ஆண்டனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த வெளியீட்டு விழாவின் போது, ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி பார்ப்பது? என்று கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு கேஷுவலாக பதிலளித்த விஜய் ஆண்டனி, “வசதி இருந்தா பண்ணிக்க வேண்டியது தானே. ஒரே நாடு.. ஒரே சாதி.. ஒரே மதம்.. முடிஞ்சா பண்ணிக்கலாம்” என்று கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் கேள்விக்கு இவரே முதல் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.