ப்ரோமோஷனுக்கு தான் நோ..பூஜைக்கு வருவேன்! நயன்தாரா எடுத்த புது முடிவா?
படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த நயன்தாரா சென்னையில் நடைபெற்ற மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. அதே சமயம், அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிக்கும் படங்களை ப்ரோமோஷன் செய்ய வருகை தருவார் என்கிற விமர்சனம் அவர் மீது இன்னும் இருந்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இதனை வெளிப்படையாகவே பேசி குற்றம்சாட்டி இருந்தார்கள்.
இந்த சூழலில், படத்தின் ப்ரோமோஷனுக்கு தான் வரமாட்டேன்…படத்தின் பூஜைக்கு வருவேன் என்பது போல மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகத்திற்கான பூஜைக்கு நயன்தாரா வருகை தந்துள்ளார். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் 100 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து, படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று சென்னையில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் சுந்தர் சி, நயன்தாரா, மீனா, டிடி, குஷ்பூ, ரெஜினா, உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அதில் நயன்தாரா கலந்து கொண்டதற்கான புகைப்படங்களை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் இனிமேல் நயன்தாரா ப்ரோமோஷனுக்கும் வருவார் என கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே, நயன்தாரா தன்னை இனிமேல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கவேண்டாம் என திடீரென அறிவித்து இருந்தார். அது மட்டுமின்றி, அவர் நடிக்கும் படங்களும் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே, பட்டமும் வேணாம் என கூறிவிட்டு இதுவரை பூஜைக்கு கூட வராமல் இருந்த நயன்தாரா இப்போது பூஜையில் கலந்து கொண்டு இருப்பதால் இனிமேல் அவர் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது…இதற்கு நமக்கு பதில் வேண்டும் என்றால் கொஞ்சம் நாட்கள் காத்திருந்து பார்க்கலாம்..