குளத்தை ஆக்கிரமித்த நாகார்ஜுனா.. 4 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்டம் தரைமட்டம்.!
தெலுங்கானா : ஹைதராபாத் மாதப்பூர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்திருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்ட்டது.
ஹைதராபாத்தின் மாதாப்பூரில் அமைந்திருந்த மிகவும் பிரமாண்டமான ‘N Convention’ அரங்கம் இடிக்கப்பட்டது. தம்மி செருவு என்ற ஏரியில் 3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஐதராபாத் தும்மிடிகுண்டாவில் 1.12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாகார்ஜுனா கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா கட்டடத்தை ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.
ஐதராபாத் பேரிடர் மீட்பு, சொத்து கண்காணிப்பு பாதுகாப்பு (HYDRA) அதிகாரிகள் தான் இந்த ஆக்கிரமிப்பை அகற்றியதாக கூறப்படுகிறது. இந்த குளம் நகரத்திற்கு நீர் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது, அதன் பாதுகாப்பிற்காக பல போராட்டங்கள் இதற்கு முன்னதாக நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, “ சட்டவிரோதமாக நிலம் பயன்படுத்துவதையும், இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பதையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதற்கான தெளிவான செய்திதான் என் மாநாட்டு மையத்தை இடிப்பது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகர்ஜுனா மறுப்பு
நீதிமன்றம் எனக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால், நானே கட்டடத்தை இடித்திருப்பேன். ஆக்கிரமிப்பு புகாருக்கு நடிகர் நாகர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் மறுப்பு தெரிவித்து தெலுங்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சட்டவிரோதமாக எனது N CONVENTION அரங்கம் தரைமட்டமாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. நாங்கள் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் ஈடுபடவில்லை.
ஏரியின் இடம் சிறிதும் ஆக்கிரமிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட சட்டவிரோத நோட்ஸ்க்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தவறான தகவலை மையமாக வைத்து அரங்கம் தகர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்றம் எனக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே கட்டடத்தை இடித்திருப்பேன். தவறான நடவடிக்கைக்காக நிவாரணம் கோரப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.