பாலியல் வன்கொடுமை வழக்கு: முகேஷ் மற்றும் சித்திக் முன்ஜாமின் கேட்டு மனு.!
பாலியல் வன்கொடுமை வழக்கில், நடிகர்கள் முகேஷ் மற்றும் சித்திக் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கொச்சி : மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களை ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்ட பிறகு, மலையாளத் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் மீது, நடிகைகள் சிலர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
அதன்படி, மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 17 புகார்கள் வந்த நிலையில், இதுவரை நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு ஆகியோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவரான நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை ஒரு வாரத்திற்கு கைது செய்யக்கூடாது என கொச்சி முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவரது கைதுக்கான இடைக்கால தடை நாளையுடன் காலாவதியாகும் நிலையில், தனக்கு முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை நடைபெறுகிறது. நடிகர் சித்திக் இன்று மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஜாமின் மனு மீது விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.
முகேஷ்
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருச்சூர் எடக்காட்டில், ‘நாட சுமே உலகம்’ என்ற படத்திற்கான படப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை கொடுத்தாக கொச்சியைச் சேர்ந்த பெண் நடிகை ஒருவரின் புகாரின் பேரில், கொல்லம் எம்எல்ஏ மீது எர்ணாகுளத்தில் உள்ள மரடு போலீஸார், வன்கொடுமை உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், எம்.எல்.ஏ பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்யக் கோரி பாஜக மற்றும் காங்கிரஸின் போராட்டங்கள் வெடித்துள்ளது.
சித்திக்
கடந்த 2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்காட் ஹோட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் கூறிய புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், சித்திக் மீது பாலியல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளைப் பதிவு செய்தனர்.