வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!
வார் (WAR) திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வார் (WAR). இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் ஹிருத்திக்கின் மேஜர் கபீர் கதாபாத்திரத்திற்கு கிடைத்த பலத்த வரவேற்பால் உலகளவில் ரசிகர்களை கவர்ந்தது.
ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “War 2” படமும் உருவாகி அதே உற்சாகத்துடன் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது.
முதல் பாகத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, “War 2” ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. இதனை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்தார். இயக்குநர் அயன் முகர்ஜி இப்படத்தை இயக்குகிறார், இவர் “Brahmastra” போன்ற பிரம்மாண்ட படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் கதாபாத்திரத்தில் நடிக்க, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படம் 2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமையலாம். முதல் பாகத்தில் விஷால்-ஷேகர் இசையமைத்த பாடல்கள் ஹிட் ஆனதைப் போல, இதிலும் துள்ளலான இசை எதிர்பார்க்கப்படுகிறது. முதல் “War” திரைப்படம் (2019) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
அதேபோல், “War 2” திரைப்படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக வாய்ப்புள்ளது, ஏனெனில் இது ஒரு பான்-இந்திய அளவிலான படமாக திட்டமிடப்பட்டிருக்கும் காரணத்தால் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜூனியர் என்.டி.ஆர் இதில் நடிப்பதால் தென்னிந்திய சந்தையையும் குறிவைத்துள்ளது. இருப்பினும், தமிழ் வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.